கோயம்புத்தூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில், நேற்றிரவு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனைக் கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அது பொதுமக்களின் உடமைக்கும், உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது எனவும் மக்கள் ஒற்றுமை மேடையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அப்போது, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் பேசுகையில், ”நீதிமன்றங்கள் பல வழக்குகளில் இது போன்ற கடையடைப்புகளை நடத்தக் கூடாது என அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை இரு அமைப்பினர் கடையடைப்பு நடத்துவதாகத் தெரிகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல், தடுப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல், இந்து முன்னணி அமைப்பினர், முன்னதாக சசிக்குமார் இறுதி ஊர்வலத்தின்போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர். ஆகவே, மக்களின் அச்சத்தைப் போக்கி இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கடையடைப்புக்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இஸ்லாமியர்களின் கடையடைப்பு போராட்டம் குறித்த கேள்விக்கு, அவர்கள் அச்சத்தின் காரணமாக இப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும், கடையை திறந்து வைத்தாலும், மூடினாலும் எந்த சூழலிலும் தகராறு ஏற்படும் என இந்த முடிவை எடுத்துள்ளார்கள எனவும் பதிலளித்தார்.
இதையும் படிங்க: இந்து முன்னணியை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் நாளை கடையடைப்பு