கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி கோமளம், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (நவ.30) இரவு தனியாக இருந்த மூதாட்டி கோமளத்தின் வீட்டிற்கு வந்த இரு நபர்கள், வீடு வாடகைக்கு கேட்பதைப் போல பேசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மூதாட்டியின் கை, கால்களை கட்டிப் போட்டு, அவர் அணிந்து இருந்த நகை, வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். அந்த நேரத்தில் கோபாலகிருஷ்ணனின் மனைவி அனிதா மூதாட்டிக்கு சாப்பாடு கொடுக்க வந்துள்ளார். வீடு உட்புறம் பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த அமிதா, ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
அப்போது வீட்டினுள் மர்மநபர்களின் நடமாட்டம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, உடனடியாக வீட்டு வாசலை பூட்டிவிட்டு வெளியில் சென்று, அக்கம்பக்கதாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே வீட்டின் கதவை உடைத்து வெளியே வந்த அந்த மர்ம நபர்கள் இருவரும், அனிதாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி ஓடிய நிலையில், அனிதா கூச்சலிடவே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த மர்ம நபர்கள் இருவரையும் விரட்டி பிடித்தனர்.
இதையடுத்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் விக்னேஸ்வரன் என்பதும், இருவரும் தற்பொழுது நீலாம்பூரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களில் ஒருவர், ஏற்கனவே கோமளம் வீட்டு மாடியில் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பது குறித்த தகவல் அவருக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததால், மூதாட்டியை கட்டி போட்டு விட்டு நகை பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் இருவரும் வந்துள்ளனர். இதனிடையே வீட்டில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றிய போலீசார் அவர்கள் இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கு மூளையாக இருந்த பெண்! கொள்ளையனை நெருங்கிய போலீஸ்..முழுப்பின்னணி என்ன?