வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு கோவை மாவட்டத்தில் தங்கும் விடுதி உள்ளது. இந்நிலையில் விடுதியை கவனிக்க ஆள் இல்லாததால் விஜயகுமார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு கணேஷ் மற்றும் மகேந்திரன் ஆகியோருக்கு தங்கும் விடுதி மாதம் 50,000 ரூபாய் வாடகைக்கு கொடுத்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக மகேந்திரன் பிரபு கணேஷ் ஆகியோர் விடுதியை கவனித்து வந்தனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விடுதி மூடப்பட்டது. எனினும் விடுதி மூடப்பட்டாலும் தனக்கு மாத வாடகை 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என விஜயகுமார் இவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாத வருமானம் இல்லாத நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது எப்படி என இருவரும் திண்டாடி வந்துள்ளனர்.
அப்போது இவர்களை அணுகிய கர்நாடகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு தெரிந்த பெண்கள் உள்ளதாகவும், அவர்களை வைத்து விடுதியில் பாலியல் தொழில் நடத்தினால் வருமானம் வரும் என்றும், அதை கொண்டு வாடகை கொடுக்கலாம் மற்ற செலவுகளை சமாளிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மகேந்திரன், பிரபு கணேஷ் ஆகியோர் தங்கும் விடுதியில் உள்ள கழிப்பறையை மறைத்து ரகசிய படுக்கையறை அமைத்துள்ளனர். மேலும் கர்நாடகாவிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே இது குறித்து தகவலறிந்த அப்பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர் இதை வெளியே சொல்லாமல் இருக்க தனக்கு குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என இவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கவே, அந்நபர் இந்தத் தகவல் குறித்து காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி இரவு அந்த விடுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், ரகசிய அறையிலிருந்த இளம்பெண்ணை மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து பிரபு கணேஷ், மகேந்திரன் ஆகியோரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வருமானம் இல்லாததால் இருவரும் முதன்முறையாக பாலியல்தொழில் நடத்தி வந்ததும், இவர்களுக்கு பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் உதவியதும் தெரிய வந்தது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் இதுபோன்ற வேறேதேனும் விடுதிகளில் பாலியல்தொழில் நடைபெறுகிறதா என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மனைவி, மகன் மீது கல்லை போட்டு கொன்று விட்டு கணவர் தப்பியோட்டம்!