கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் ஏப்ரல் 9ஆம் தேதி புங்கன் ஓடை போத்தமடையில் இரண்டு புலிகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு மருத்துவர்களுடன் விரைந்த வனத்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்கு உட்படுத்தினர்.
அதில் விஷம் வைத்து புலிகள் கொல்லப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து வனத்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அப்பகுதி விவசாய நிலங்களில் பணிபுரியும் ராசு, கருப்புசாமி, வெள்ளிங்கிரி, முருகன் ஆகிய நான்கு பேருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து ராசு, கருப்புசாமி இருவர் கைது செய்யப்பட்டு மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருந்துவந்த வெள்ளிங்கிரி, முருகன் இருவரை வனத்துறையினர் தேடிவந்த நிலையில், இருவரும் சேத்துமடை பகுதியில் கைது செய்யப்பட்டு அவினாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விஷம் வைக்க தூண்டிய நில உரிமையாளர்களை வனத்துறையினர் கைது செய்யாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மூன்று வனச்சீருடை பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர், மூவரின் (பிரபாகரன், சபரிநாதன், அஜித்தரன்) பணிநீக்கத்தையும் ரத்து செய்ய உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: முதுமலை காப்பகத்தில் புலி இறந்த விவகாரம்: வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்