Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவை காரமடையை சேர்ந்த TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்துவும் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக பயணித்தனர். இதுதொடர்பாக போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் TTF வாசன் மீது பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்த TTF வாசன் முன்ஜாமின் பெற்றார். நீதிமன்றத்தில் 10 நாட்களுக்கு தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட சென்ற வாசன், நீதிமன்றத்திற்கு தான் வீட்டிலிருந்து கிளம்புவது, நீதிமன்ற வளாகத்திற்குள் காரில் வந்து இறங்குவது, ஜாமின் புத்தகத்தில் கையெழுத்திடுவது என அனைத்தையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.
அதிலும் KGF திரைப்படத்தில் வரும் வன்முறை எனக்கு பிடிக்காது,ஆனால் வன்முறை என்னை விரும்புகிறது அதை என்னால் தவிர்க்க முடியாது என்ற வசனத்துடன் இணைத்து நீதிமன்றத்தில் ஜாமின் கையெழுத்திடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக குற்றம் புரிந்தவர்கள் காவல் நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ வர சங்கடப்படும் நிலையில் தான் செய்த தவறுக்காக நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமின் பெற்ற வாசன் எந்த ஒரு பயமும் இல்லாமல் தனது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இதனையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது தவறு செய்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும், அவர் மீது காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க : ’அரசு ஊழியர்கள் தங்களை சூப்பர் ஹீரோவாக நினைக்கக் கூடாது...!’ - சென்னை உயர்நீதிமன்றம்