கோயம்புத்தூர்: திருமலையம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட நஞ்சப்பனூர் கிராமத்தில் பழங்குடியின மாணவி சங்கவி நீட் தேர்வில் முதல் தலைமுறை மாணவியாக தேர்ச்சிப் பெற்று சாதித்துள்ளார்.
அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 12ஆம் வகுப்பு முடித்த முதல் மாணவியும் சங்கவி தான். இவரது தந்தை உயிரிழந்தபோதும் உயர் படிப்பிற்கு சாதிச் சான்றிதழ் வாங்க கடும் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த சான்றிதழை வாங்கினார்.
பழங்குடியின மாணவியின் போராட்டம்
சாதிச் சான்றிதழ் வாங்கும் போராட்டத்தில் சங்கவி ஈடுபட்டதால் அரசின் பார்வை, அந்தக் கிராமம் பக்கம் திரும்பியது. இதையடுத்து அங்கு மின்சாரமும், தார்ச் சாலையும் கிடைத்தன.
இருப்பினும் சில அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. எனினும், கனத்த மனதோடு நீட் தேர்வுக்கு சங்கவி படிக்கத் தொடங்கினார். ஆனால் வறுமையும், அடிப்படை வசதியும் இன்றி சென்ற முறை 6 மதிப்பெண்களில் வாய்பைத் தவறவிட்டார்.
முதல் மருத்துவர்
இந்நிலையில் விடா முயற்சியுடன் படித்து கட் ஆப் மதிப்பெண்ணைத்தாண்டி, தற்போது நீட் தேர்வில் சங்கவி தேர்ச்சி அடைந்துள்ளார். இதன்மூலம் அப்பகுதியில் இருக்கும் பழங்குடியின சமுதாயத்தில் முதல் மருத்துவராக அவர் உருவாகவுள்ளார்.
பிரச்னையை உடைத்த சங்கவி
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியால் சங்கவியின் கல்வி கனவு நிறைவேறியது. இது குறித்து அவர் கூறுகையில், "12 ஆம் வகுப்பு படித்த பிறகு பயம் இருந்தது. நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை. 2018ஆம் ஆண்டு தேர்வு எழுதினேன். 6 மதிப்பெண் குறைவால் தவறவிட்டேன்.
தொடர்ந்து 2ஆவது முறையாக தேர்வு எழுதுவதற்கு கடினமாக படிக்க முயற்சி செய்தேன். ஆனால், கரோனா இரண்டாவது அலை, ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் தொடர முடியவில்லை. அம்மாவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்திருந்த சூழல், கையில் இருக்கும் புத்தகங்களை வைத்து நீட் தேர்விற்குப் படித்தேன். இதன் காரணமாக இம்முறை 202 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: ரசாயனம் இன்றி விவசாயம் செய்து அசத்தும் இயற்கை விவசாயி!