கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு மான், கருமந்தி, யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை போன்ற பல விலங்குகள் வசித்துவருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ, அங்கு இருக்கும் வன விலங்குகள் முன் நின்று செல்ஃபி எடுக்க முயல்வதோ கூடாது என விதி இருந்தாலும், வனத் துறையினர் கண்டு கொள்ளாததால் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளின் அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயல்வதும் வனவிலங்குகளை மிரளவைக்கின்றது.
இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் வனத் துறையினரின் அலட்சியத்தால் தற்போது இரு சக்கர வாகனங்களில் சிலர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
புலிகள் காப்பகப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறுவதும் இருசக்கர வாகனங்களில் வந்து செல்வதும் வனத் துறை உயர் அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.