பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அம்பராம்பாளையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சூளேஸ்வரன்பட்டி பகுதியில் தனியார் பல்பொருள் எதிர்புறம் இருந்த ராட்சதமரம் இரவு பெய்த கனமழையால் இன்று(ஆகஸ்ட் 5) அதிகாலை முறிந்து விழுந்தது.
![Tree damage in pollachi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04:00:17:1596623417_tn-cbe-04-pollachi-rain-damagetree-vis-tn10008_05082020155412_0508f_1596623052_816.jpg)
இதில், சாலையோரம் நின்றிருந்த நல்லூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்ற இளைஞர் மீது மரம் விழுந்ததில் தலையின் பின்புறம் அடிபட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அடிபட்ட இளைஞரை மீட்டு, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர்,மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், முறிந்து விழுந்த ராட்சத மரத்தை பொதுமக்கள் உதவியோடு நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.