கோவை: கோவையில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில், பிறந்து 40 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் குழந்தைக்கு உடல் நலம் குன்றிடவே, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், சிகிச்சைக்கு ரூ. 1.75 லட்சம் வரை செலவாகும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவால் சிகிச்சை
இதனால் செய்வதறியாது திகைத்த தொண்டு நிறுவன நிர்வாகி வனிதா, குழந்தையின் சிகிச்சைக்காக வாட்ஸ் அப் மூலம் மாவட்ட ஆட்சியர், தன்னார்வலர்கள் ஆகியோரிடம் உதவி கோரினார்.
இதனையடுத்து குழந்தைக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று(அக்.22) உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் குழந்தைக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் இருதய நோய்க்கான சிகிச்சை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் முதன் முறையாக பிறந்து 40 நாள்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு, மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை வழங்குவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தாயார் பெயரின் முதல் எழுத்து மகளின் இனிஷியல் - அரசு விளக்கம் அளிக்க உத்தரவு