கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து திருச்சிக்குச் செல்லக்கூடிய பயணிகள் ரயில் இன்று காலை 8.30 மணி அளவில் கோவை ரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடைக்கு வந்தது. பயணிகள் இறங்கிய பின்னர் ரயில் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஓடும் ரயிலில் பயணி ஒருவர் ஏறினார்.
அப்போது கால் தவறி கீழே விழுந்த அவரை, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் விஜயன் என்பவர் ஓடிச்சென்று தூக்கிவிட்டு காப்பாற்றினார். இந்தக் காட்சி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து ரயில்வே பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு சேலம் கோட்ட மேலாளர் சுப்பா ராவ் பாராட்டு தெரிவித்து சான்றிதழ், வெகுமதி வழங்கிப் பாராட்டினார். பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் விஜயனுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணற்றில் 'கை' அசைத்த குழந்தை! - நம்பிக்'கை'யோடு தொடரும் மீட்புப் பணி