கோயம்புத்தூர்: பறவைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு பறவைகளை பார்த்தாலே குதூகலம் தான். அதுவும் பறவைகள் உடல் மீது ஏறி அங்கும் இங்கும் நடந்தால் கேட்கவா வேண்டும். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வு ஒரு சிலரின் வீட்டை தவிர வேறு எங்கும் நடப்பதில்லை. இதனால் பறவைகளை கண்டு ரசிக்க மலைப் பிரதேசங்களுக்கும், காடுகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இத்தகைய சூழலை போக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் ஒரே இடத்தில் பல வகையான வெளிநாட்டு பறவைகளை பார்த்து மகிழும் எக்ஸாட்டிக் பறவைகள் பூங்காவை உருவாக்கியுள்ளார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர் முத்துசாமி.
இங்கு சிறுவர்களுக்கு நுழைவு கட்டணமாக 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் வசூலிக்கின்றனர். உள்ளே வருபவர்களுக்கு நேரக்கட்டுபாடு கிடையாது. கூண்டினுள் வந்ததுமே பறவைகள் பறந்து வந்து பார்வையாளர்கள் தோளிலும், கைகளிலும் அமர்ந்து கொள்வதால் அனைவரும் தனி உலகத்திற்கு சென்று விடுகின்றனர்.
சோர்வு, பயணக் கழைப்பு, பணிச்சுமை , மன அழுத்தம் என எந்த மாதிரியான மனநிலையில் உள்ளே நுழைந்தாலும், மறுகணமே அவை எல்லாம் பறவைகளால் மறக்கடிக்கப்படுகிறது. உள்ளே நுழைந்ததும் மஞ்சள் நிற பறவைகள் கூட்டமாக நம்மை வலம் வரும். அவை எழுப்பும் கீச்சுகீச்சு சத்தம் பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.
ஒவ்வொரு இன பறவைகளுக்கும் அதன் பாதுகாப்பு கருதி தனித்தனி கூண்டுகளில் வைத்திருக்கின்றனர். இதில் சீனாவை சேர்ந்த பறவை (Golden pheasant), சவுத் அமெரிக்காவை சேர்ந்த ஓணான் (Iguana), ஆஸ்திரேலியாவை சேர்ந்த பறவை (Diamond Dove), நியூசிலாந்தை சேர்ந்த பறவை (Lady Amherst pheasant), வட அமெரிக்காவை சேர்ந்த வாத்து (Wood Duck), ஜப்பானை சேர்ந்த வாத்து (Mandarin Duck), தென் அமெரிக்காவை சேர்ந்த கிளி (sun parakeet) போன்றவை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமில்லாமல் ஆப்பிரிக்காவை சேர்ந்த பைதான், இரவு நேரத்தில் மட்டுமே கண் விழித்திருக்கும், பகல் முழுவதும் இது தூங்கும். உடல் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், இதன் வயிற்று பகுதியில் மட்டும் ஸ்மைலி (Smiley) வடிவத்தில் ஒரு இயற்கையான தோற்றம் உள்ளது.
இந்த பூங்காவிற்கு வருபவர்கள் தவறாமல் இந்த பைதான்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நியூசிலாந்தை சேர்ந்த முள்ளந்தண்டு பாலூட்டி (Hedgehog), முழுவதும் வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு சின்ன முள்ளம்பன்றி போல் காட்சியளிக்கும். ஆபத்தில் இருந்து தற்காத்துகொள்ள பந்து போல், அதன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.
சிரியா நாட்டை சேர்ந்த வெள்ளெலிகள் (Hamsters) மற்றும் யூரோப் நாட்டை சேர்ந்த முயல்களை பிடிக்க பயன்படும் ஃபெரெட் (Ferret) இங்கு காணமுடிகிறது. தென் அமெரிக்காவை சேர்ந்த நீளமான வால் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி (Macaw), மனிதர்களுக்கு இணையாக பேச்சு கொடுக்கிறது. குழந்தைகள் பார்த்தால் குஷியாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் கிளி (Gray Parrot) இனம் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போல் காட்சியளிக்கும். நாம் அதை கடந்து சென்றால் விசில் அடித்து கூப்பிடும். அங்கு பணியாளர்கள் அதை "டார்லிங்" என்று செல்லமாக அழைக்கின்றனர். அதுவும் அனைவரிடமும் அவ்வப்போது பேசுகிறது.
பேரோந்திகள் (Iguanas) என்ற வகை ஓணான் பார்ப்பதற்கு கரடுமுரடாக காட்சியளித்தாலும், அது பரம சாது. யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் நடந்து சென்று கொண்டே இருக்கும்.
இதுகுறித்து அங்கு வந்த சுற்றுலாப் பயணி சம்பத் குமார் கூறுகையில், "பல்வேறு பணிகளுக்கு இடையே மன உளைச்சலில் வருபவர்களுக்கு நல்ல ஒரு அமைதியை ஏற்படுத்துகிறது. கூண்டிற்குள் வந்தவுடன் பறவைகள் நம் மீது அமர்வதால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்கக்கூடிய அரிய வகை கீரி, முள்ளம்பன்றி, பாம்பு வகைகள் இங்கு உள்ளன" என்றார்.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர் பிரியா கூறுகையில், "காலை முதல் மாலை வரை இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வெளி உணவுகள் கொண்டு வர உள்ளே அனுமதி இல்லை. பறவைகளுக்கு உணவு கொடுக்க விரும்வோர், பூங்கா கொடுக்கும் தானியங்களை மட்டுமே வழங்க வேண்டும். மேலும் இங்குள்ள பறவைகளிடம் அவர்கள் பேசி மகிழ்கின்றனர். ஒட்டுமொத்தமாக இங்கு வரும் அனைவரும் குழந்தைகளாகவே மாறி பறவைகளிடம் பேசுகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு