கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த 19ஆம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் தள்ளுவண்டியில் வேலுமயில் என்பவர், தனது மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுடன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி உதவி காவல் ஆய்வாளர் செல்லமணி தகுந்த இடைவெளியின்றி வியாபாரம் செய்வதாகக் கூறி கடையை மூட எச்சரித்தார்.
இதையடுத்து வேலுமயிலும், அவரது மனைவியும் உதவி ஆய்வாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் தனது பெற்றோரைத் திட்டியதால் ஆத்திரமடைந்த சிறுவன் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுத்தார்.
பின்னர் காவலர்கள் அச்சிறுவனை லத்தியால் அவரைத் தாக்க முயன்றனர். அதன்பின் காவல் வாகனத்தில் அச்சிறுவனை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர். நடந்த சம்பவங்களின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இச்சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு விளக்கம் கேட்டு, கோவை மாநகரக் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, சிறுவன் பயிலும் பள்ளியில் சிறுவனின் நடத்தை குறித்து விசாரித்த ரத்தினபுரி காவல் துறையினர், சிறுவனின் நன்னடத்தை காரணமாக வழக்கு எதுவும் பதியாமல் அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமுகையில் உயிருக்கு போராடிய யானை - பத்திரமாக மீட்ட வனத்துறை