கோவை வனக் கோட்டத்தில் நடைபெறும் யானை- மனித மோதலை கட்டுப்படுத்த, 2012ஆம் ஆண்டு போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் பகுதியில் கும்கி யானைகள் முகாம் அமைக்கப்பட்டது.
இந்த முகாமில் நஞ்சன், பாரி, விஜய் ஆகிய மூன்று கும்கி யானைகள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனைதொடர்ந்து முதுமலையில் இருந்து சேரன், ஜான் என்ற கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இந்த யானைகள் கிராமங்களில் புகுந்து மக்களுக்குத் தொல்லைக் கொடுக்கும் காட்டு யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், வனப்பகுதியில் இருந்து முகாமில் நுழைந்த காட்டுயானை ஒன்று கும்கிகளில் ஒன்றான சேரனை தாக்கியது. இதில் சேரனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கும்கி சேரன், ஜானை வேறுமுகாமிற்கு மாற்ற வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதில்,தற்போது முதற்கட்டமாக நேற்று இரவு ஜானை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுச் சென்றனர். இதையடுத்து நாளை கும்கி சேரனை முதுமலைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து வெங்கடேஷ், சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.