கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது முகக்கவசங்களைத் தயாரிக்கும் இயந்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்திடம் கியூ அண்ட் கியூ என்ற நிறுவனமானது, முகக்கவசம் தயாரிக்கும் இயந்திரத்தை செய்து தரக்கோரி அணுகியுள்ளது.
அந்த கியூ அண்ட் கியூ நிறுவனமானது முகக் கவசங்கள் தயாரிக்கும் அந்த இயந்திரத்தை தங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், மற்ற யாருக்கும் வழங்கக் கூடாது என்று மிரட்டியதாகக் கூறி, சாஸ்தா நிறுவனத்தின் உரிமையாளர் மகாலிங்கம், அவரது மகன் மனோஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ்,"அந்த கியூ அண்ட் கியூ நிறுவனமானது சென்னையைச் சேர்ந்த டிஐஜி, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு தங்களை மிரட்டுவதாகவும், இயந்திரத்தை யாருக்கும் தராமல் இவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். இல்லையெனில், பல்வேறு நடவடிக்கைகள் எடுப்போம் என்று மிரட்டி வருகிறார்கள்.
![mask-company](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-mask-company-petition-visu-tn10027_19032020202505_1903f_1584629705_901.jpg)
இவர்களுக்கு முன்பே பல நிறுவனத்தினர் தங்களிடம் ஆர்டர்கள் அளித்துள்ளதால், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த நிறுவனத்தினர் தங்களுக்கு மட்டுமே இயந்திரங்களை வழங்க வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றனர். இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிலானது பாதிப்புக்குள்ளாகும்" என்றார்.