கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பாண்டி. இவர் மாநகராட்சியில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் (அக். 29) இவர் வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த போது குடிபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் ஆட்டம் பாட்டமென சத்தம் போட்டு கொண்டிருந்ததால் முருகப்பாண்டி அதை தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் முருகப்பாண்டியை தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று, அடுத்த தெருவிலுள்ள கோபிநாத் என்பவரது வீட்டின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சத்தமிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு வீட்டின் வெளியே வந்த கோபிநாத் மூன்று இளைஞர்களும் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்து சத்தம் போட்டு கொண்டிருப்பதைக் கண்டு, அதை தட்டி கேட்டுள்ளார்.
இதனால், மீண்டும் அந்த மூன்று இளைஞர்கள் கோபிநாத்திடம் தகராறில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து கோபிநாத் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது அங்கிருந்த இருசக்கர வாகனம் கொழுந்து விட்டு எரிந்து கிடந்தது.
அதனைத் தொடர்ந்து கோபிநாத் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தனித்தனியாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்தக் கும்பல் குறித்த விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (28), அருண் (21), பிரவின் குமார் (24) ஆகியோர் என்பதும், கோபிநாத்திடம் தகராறில் ஈடுப்பட்டு வாகனத்தை எரித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மூவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.