கோவை: பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்திர நாராயண உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடியும் இருசக்கர வாகனம் திருட்டு போன இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பிலிருந்த பதிவுகளை எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலிருந்த பொழுது ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகே சந்தேகப்படும்படி இருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கோவை மாவட்டம் வதம்பச்சேரி சேர்ந்த சக்தி குமார் என்பதும், இவர் எக்ஸ்எல் சூப்பர் வாகனம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சக்திகுமாரிடம் இருந்த 15 எக்ஸ்எல் சூப்பர் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சக்தி குமாரைக் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சக்தி குமார் குறிப்பாக எக்ஸ்எல் சூப்பர் இருசக்கர வாகனத்தை மட்டும் திருடுவது தொழிலாக கொண்டுள்ளார். தற்போது 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு வந்த பிறகு இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தனியாக வசிக்கும் பெண்களிடம் சில்மிஷம்.. 2 பேர் கைது..