கோவை: அன்னூரில் சத்தி சாலை என்பது பிரதான சாலையாக உள்ளது. இவ்வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூருவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, இச்சாலைகள் தோண்டப்பட்டதில் சாலை சேதமடைந்துள்ளது.
இதில் சத்தி சாலை சந்திப்பில் சாலையின் நடுவே குண்டும் குழியுமாக மாறி மாறி சேதமடைந்துள்ளதால், அந்த சாலை வழியே பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்குப் பல முறை தெரிவித்தும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை இந்த குழியில் சிக்கி இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து வியாழக்கிழமை இரவுப்பணியில் இருந்த தலைமைக் காவலர் ஜேம்ஸ், விபத்தினைத் தடுக்கும் வகையில் தானே களத்தில் இறங்கி குழியை செப்பனிட முடிவு செய்தார்.
சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களையும் மண்ணையும் கொண்டு சாலையில் ஏற்பட்ட குழிகளை மூடினார். இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காவலரின் இந்த நடவடிக்கைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து காவலரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியார் ரயில் சேவை - ரயில்வே அமைச்சருக்கு டி ஆர் பாலு கடிதம்