கோயம்புத்தூர்: சூரிய கிரகணத்தின்போது அசைவம் சாப்பிடக்கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற மூட நம்பிக்கையை போக்கும் வகையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நேற்று(அக். 25) கிரகண நேரத்தின்போது அசைவ உணவு செய்து மக்களுக்கு வழங்கினர். சூரிய கிரகணம் என்ற அறிவியல் சார்ந்த வானியல் செயல்பாடு நேற்று(அக்.25) மாலை 4:30 மணி முதல், மாலை 6:30 மணி வரை நிகழ்ந்தது.
இந்த சூரிய கிரகணத்தின் போது, பொது மக்களுக்கு பல்வேறு விதமான அச்சங்களும் மூடநம்பிக்கைகளும் உள்ளதாக பகுத்தறிவாளர்கள் தரப்பில் விமர்சிக்கப்படுகிறது. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பகுத்தறிவாளர்கள் தரப்பில் கருத்து வைக்கப்படுகிறது.
சூரிய கிரகணத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாகவே கருத வேண்டும் என்றும், அதனால் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சப்பட வேண்டாம் என்றும் திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையத்தில் சூரிய கிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோழி குழம்பு மற்றும் சோறு சமைத்து நல்லிசெட்டிபாளையம் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி உண்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: கார் வெடித்த சம்பவம் குறித்து ஸ்டாலின் மெளனம் காப்பது ஏன்? - வானதி சீனிவாசன்