கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர், அப்பகுதியில் தேநீர் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது பல்வேறு வகையான தேநீரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி புதுமை படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கணுவாய் பகுதியில் தற்போது தேநீர் கடை ஒன்றை நடத்தி வரும் மாணிக்கம், ஒரே டம்ளரில் மூன்று முதல் ஜந்து வகையான தேநீர் வழங்கி வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறார். இந்த புதுமையைக் கண்ட அப்பகுதி மக்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அந்த கடைக்குச் சென்று தேநீர் அருந்துகின்றனர்.
இவர் தயாரிக்கும் தேநீரில் பால், பூஸ்ட், டிக்காஷன், ஹார்லிக்ஸ், போன்விட்டா என அனைத்தும் ஒரே டம்ளரில் கிடைப்பதே வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. மேலும் தேநீரின் மேல் பகுதியில் நட்சத்திரம், இதய வடிவிலான குறியீடுகளையும் டிக்காஷனில் போட்டு தரப்படுகிறது. ஒரே டம்ளரில் அளிக்கப்படும் இந்த தேநீரானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சுவைகளை அளிப்பதால் வெளி ஊர்களில் இருந்து பலரும் மாணிக்கத்தின் கடையை தேடிவருகின்றனர். அவர் அளிக்கும் இந்த லேயர் தேநீருக்கான விலையாக ரூ. 30 என நிர்ணயம் செய்துள்ளார்.
இது குறித்து மாணிக்கம் கூறுகையில், ஆரம்பம் முதல் தேநீர் வியாபாரம் செய்து வந்ததால் அதில் ஏதேனும் புதுமை செய்ய வேண்டும் என சிந்தித்தேன். அதை ஐந்து வகையான சுவை கொண்ட தேநீரை வழங்கி வருவதன் மூலம் செய்துள்ளேன். மேலும், நீண்ட தொலைவில் இருந்து தனது லேயர் தேநீர் அருந்த மக்கள் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.