கோவை: கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தை திறந்து வைத்தார். மேலும் அங்குள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு ஹோட்டல்களை புதுப்பித்து வருகிறோம். தமிழ்நாடு ஹோட்டல்களை புதுப்பிப்பதால் வருவாய் அதிகரிக்கக்கூடும்- புதுப்புது உணவுகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். தனியார் ஹோட்டல்களுக்கு நிகராக தமிழ்நாடு ஹோட்டல்களையும் புதுப்பித்து வருவதால், அதிகமான வருவாயை ஈட்டக்கூடிய நம்பிக்கை உள்ளது.
சுற்றுலா தளம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு வெவ்வேறு புதிய வசதிகளை செய்ய உள்ளோம். அதன்படி கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மற்றும் சில ஏரிகள், அணைகள், ஒகேனக்கல், பூம்புகார் ஆகியவற்றை புதுப்பித்து வருகிறோம்.
பொள்ளாச்சியில் தமிழ்நாடு அரசு நடத்தும் பலூன் திருவிழா நடக்கவிருக்கும் இடங்களை ஆய்வு செய்ய இருக்கிறோம். இதுவரை தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வந்த பலூன் திருவிழாவை இம்முறை தமிழ்நாடு அரசு முன்வந்து நடத்துகிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: தாய்லாந்தில் யானை பாகன்களுக்கு பயிற்சி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு!