கோயம்புத்தூர்: சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் சினிமா படப்பிடிப்பு மற்றும் திரைத்துறைச் சார்ந்த பல்வேறு விஷயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கியுப் (QUBE) மற்றும் பிராட்வே (Broadway) சினிமாஸ் இணைந்து 'எபிக்' (EPIQ) தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரை வசதியுடன் திரையரங்கு மற்றும் லேசர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐ-மேக்ஸ் திரையரங்கத்தை அறிமுகம் செய்துள்ளன.
கோவை அவிநாசி சாலையில் 9 திரைகளுடன் சினிமாவிற்கு என்றே பிரத்யேகமாக பிரேட்வே சினிமாஸ் நிறுவனம், மால் ஒன்றை திறந்து வைத்துள்ளது. இதில் 9 சராசரி திரைகள், ஒரு கோல்டு திரையரங்கம், ஒரு EPIQ திரையரங்கம், ஒரு IMAX திரையரங்கம் உள்ளது. இதில், ஏற்கனவே 6 சராசரி திரையரங்குகள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இதர மூன்று சிறப்பு வாய்ந்த திரையரங்குகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதுதான் தமிழகத்தின் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள EPIQ தொழில் நுட்பத்துடன் கூடிய திரையங்கு ஆகும்.
இதையும் படிங்க: வெளியானது 'ஜெயிலர்' பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!
சிறப்பம்சங்கள்: வழக்கமான திரையரங்குகளில் 2:35 என்ற விகிதாசாரத்தில் திரை இருக்கும். ஆனால், இந்த எபிக் திரையரங்கில் 1:89 என்ற விகிதாச்சாரத்தில் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 70 அடி அகலம், 37 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான பெரிய திரையாகும்.
இதனால் இந்த திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் போது பிரமாண்டத்தை உணர்வதோடு மற்றும் துல்லியமான படக்காட்சியையும் காண முடியும். RGB புரோஜெக்ட்டர், Dolby Atmos ஒலியுடன் 425 இருக்கையுடன் இந்த EPIQ திரையரங்கம் அமைந்துள்ளது.
கோவையில் ஐ-மேக்ஸ்: சென்னையைத் தொடர்ந்து ஐ-மேக்ஸ் திரையும், சொகுசு வசதியுடான கோல்டு திரையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவையைத் தொடர்ந்து மதுரை, கேரளாவில் ("EPIQ") தொழில் நுட்ப வசதிகளுடன் திரையரங்கம் அமைய உள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த EPIQ திரைக்கு தற்பொழுது 360 ரூபாய் என தமிழ்த் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த EPIQ திரையரங்கம் மற்றும் IMAX திரையரங்கம் ஆகியவை தற்போது கோவை மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
எபிக் தொழில்நுட்பம் என்றால் என்ன?: க்யூப் சினிமா அறிமுகப்படுத்தும் எபிக் திரையரங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக அகண்ட திரைகொண்ட அரங்கு ஆகும். திரையோடு ரசிகர்களை ஒன்றச் செய்து புதிய அனுபவம் தரவல்லது மற்றும் இந்த தொழில்நுட்பத்தால் திரையரங்கில் எந்த இருக்கையில் அமர்ந்தாலும் திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்துப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரையில் வரும் காட்சிகளை துல்லியமாக காட்ட வல்லது இந்த எபிக் அரங்கு. நாட்டின் அனைத்து விதமான நவீன தொழில்நுட்பங்களும் இந்த எபிக் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களை திரையோடு ஒன்றச் செய்யும் புதிய அனுபவத்தை எபிக் என்ற திரையரங்கை அறிமுகப்படுத்துகிறது, க்யூப் சினிமா நிறுவனம்.
இதையும் படிங்க: "பாராசக்தி முதல் மாமன்னன்" வரை பா.ரஞ்சித்துக்கு பதிலளித்த உதயநிதி