கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மூங்கில்மடை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் கள் இறக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று அதிகாலை தமிழ்நாட்டிலிருந்து கேரளா எல்லையான கோபாலபுரம் வழியாக இருசக்கர வாகனம் மூலம் எரிசாராயம் கடத்துவதை அறிந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், மணிகண்டனை தமிழ்நாடு எல்லையான சுள்ளிபாரக்காடு என்ற இடத்தில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வண்டியில் கொண்டு வந்த பிளாஸ்டிக் கேனில் 30 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் மணிகண்டன் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.