கோவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்திடவும், முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று (பிப்.20) மனு அளித்தனர். பின்னர் பந்தயசாலையில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் தேர்தல் நடத்தும் சிறப்பு அலுவலர் நாகராஜனிடத்தில் மனு அளித்தனர்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்திராத கலவரமானது கரூர், சென்னையைச் சேர்ந்த ரவுடிகளை வைத்து நிகழ்ந்திருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தினம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தாத்தா முதல் பேரன்வரை ஊழல்
இதனையடுத்து ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஒவ்வொரு வார்டிலும் கரூர், சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் மூலம் பண வினியோகம் செய்யப்பட்டது. திமுக தோற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அரசு அலுவலர்கள் நிர்பந்திக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. மோசமான ஜனநாயக படுகொலை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர் திமுகவினர்.
நீதிமன்ற அறிவுறுத்தல்களை அலுவலர்கள் கடைபிடிக்கவில்லை. முதலமைச்சரின் மகன் உதயநிதி, கடைசிநாள் பரப்புரையில் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். ஊழல் குறித்து பேச உதயநிதிக்கு தகுதியில்லை. உதயநிதி குடும்பமே ஊழலில் இருந்துதான் வந்தது. தாத்தாவில் இருந்து இப்போதுவரை அனைவரும் ஊழலில் திளைத்தவர்கள். சாவுமணி அடிப்பேன் என மோசமான வார்த்தையை உதயநிதி பேசியிருக்கிறார்.
முதலமைச்சர் இந்த விவகாரத்தில் மகனை கண்டிக்கவில்லை. முதலமைச்சர், உதயநிதி, இங்குள்ள அமைச்சர் ஆகியோர் கலவரத்தை உண்டாக்கியேனும் திமுகவை ஜெயிக்க வைக்க பார்க்கின்றனர். நாளை மறுநாள் (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம். வாக்கு எண்ணிக்கை சரியாக நடைபெறாவிட்டால் தடுத்து நிறுத்துவோம்” என்றார்.
இதையும் படிங்க: தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு