தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் நிகழும் விபத்துகள் ஓட்டுநர்களின் அஜாக்கிரதை காரணமாகவும், தூக்கமின்மை காரணமாகவும் ஏற்படுகின்றன.
இதில் குறிப்பாக இரவு 12 மணிக்குமேல் இயக்கப்படும் வாகனங்களில் ஓட்டுநர்கள் தூக்கத்தின் காரணமாக விபத்துகளில் சிக்கிக்கொள்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதனைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் விபத்துகள் குறையவில்லை, இவ்வாறு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வரக்கூடிய வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் சுங்கச்சாவடியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் நீண்ட தூரத்தில் இருந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து அவர்களுக்கு இரவு நேரத்தில் வாகனங்களில் இயக்கும்போது என்ன செய்யக்கூடாது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் இரவு நேரம் பயணிக்கும் போது தூக்கம் வந்தால் பாதுகாப்பான இடங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு தூங்கிவிட வேண்டும் தூக்க கலக்கத்தில் வாகனங்களை இயக்க கூடாது என காவல் கண்காணிப்பாளர் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.