கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக், ஒண்டிபுதூரிலுள்ள மேம்பாலமானது கட்டி பல வருடங்கள் ஆகிய நிலையில், தற்போது குண்டும்குழியுமாய் உள்ளதால், அதைச் சரிசெய்யக் கோரி பல முறை நெடுஞ்சாலைத் துறையிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேம்பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிய நிலையில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாகவும் மேலும் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தார். உடனடியாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பே தர்ணாவில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின் நெடுஞ்சாலைத் துறையின் உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், கோட்ட கணக்காளர் பீரான் ஆகியோர் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி 10 நாள்களுக்குள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த பின் போராட்டத்தைக் கைவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக போலி இணையதளம், கொலை மிரட்டல் வழக்கு: கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை பிணை