கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் கடைவீதியில் உள்ள மருந்துக் கடை உரிமையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் துணிக்கடை மேலாளருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அக்கடை வீதி முழுவதும் அடைத்து சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இந்நிலையில் சார் ஆட்சியர் தலைமையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர், தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், மருத்துவர்கள், உணவக உரிமையாளர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சார் ஆட்சியர், "கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க வேண்டும். 5 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால், அபராதம் விதிப்பதுடன் சீல் வைக்கப்படும். உணவகங்கள் 8 மணி வரை திறந்திருக்கலாம், பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட டயாலிஸிஸ் இளைஞர்..!