கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், வெளி மாநில மாணவர்களும் கல்லூரி விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமீப காலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவது அதிகரித்துள்ளது. கடந்த இருபது நாட்களில் மட்டும் பல்வேறு இடங்களில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம் தேதி வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்த மலைச்சாமி என்பவரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தும்மக்குண்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி, கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 19ஆம் தேதி சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வது ஒருபுறமிருக்க, மாணவர்களே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி கல்லூரியில் படித்துக்கொண்டே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கேரள மாணவர்களை சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கட பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஜான், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பாரீஸ் ஆகிய இருவரும் சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விநியோகித்து வருவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கண்காணித்த போது அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் அளவிலான கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கல்லூரியில் படிக்கும் பிற மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாணவர்கள் அதிகமாகப் படிக்கும் இடமான கோவை நகரில் தனியார் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், மாணவர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா பழக்கம் பல குற்றச்செயல்களுக்கு காரணமாக உள்ளது எனவும் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் மூலமாகவே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், சில மாணவர்கள் பகுதிநேர வருமானத்திற்காக இதனை தொழிலாகவே செய்து வருவதாகவும் கூறிய அவர்கள், அதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்கி வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
இதில் உள்ள ஆபத்தை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவையில் கல்லூரிகளில் காவல்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காணிப்பு குழுக்களை அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.