பொள்ளாச்சி-கோவை சாலையில் ஆக்சிஸ் தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு இளைஞர் ஒருவர் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக இன்று (பிப்.22) வந்துள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு காசாளரிடம் கொடுத்த போது, அவர் அந்த பணத்தை இயந்திரத்தில் வைத்து எண்ணியுள்ளார்.
அப்போது, அதிலிருந்த சில ரூபாய் நோட்டுகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இது குறித்து மேலாளர் செல்வகுமார் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இரண்டு லட்சம் ரூபாய் நோட்டுகளை வங்கி மேலாளர், ஊழியர்கள் சோதனை செய்ததில், 28 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 14 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த மேலாளர் உடனடியாக பொள்ளாச்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் இந்த பணத்தையும், வங்கி எண்ணையும் கொடுத்து டெபாசிட் செய்யுமாறு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்த இளைஞரை கைது செய்து, அவரிடம் இந்த பணத்தை கொடுத்து அனுப்பிய தனியார் நிறுவனம் குறித்தும், அவர்களுக்கு இந்த கள்ள நோட்டு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச் சாராயம் விற்ற பெண் உள்பட இருவர் குண்டர் சட்டத்தில் கைது!