கோவை மாவட்டத்தை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் உள்ளன. குளிர் பிரதேசமான நீலகிரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இந்த விடுதிகளை பயன்படுத்துவர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், இப்பகுதியில் இயங்கி வந்த அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் சாலையில் கல்லார் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெற்றுவருவதாக மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான காவல் துறையினர், முன்புறம் பூட்டிக்கிடந்த விடுதியை திறந்து ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு அறையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த முகம்பார்க்கும் கண்ணாடி சற்று பெரிய அளவில் இருந்ததால், இது காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் கண்ணாடியை சற்று அழுத்தியபோது, அது கதவு போல் திறந்து கொள்ள, உள்ளே ஒரு ரகசிய அறை இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
காவல் துறையினர் விடுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, பெண்களை இந்த ரகசிய அறைக்குள் மறைத்து விடுவதும், பின்னர் அவர்கள் சென்றதும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஒரு பெண் உள்பட தனியார் விடுதியின் காப்பாளர் மற்றும் விடுதி ஊழியர் என மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு: புதுமணத் தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம்!