கோயம்புத்தூர்: சேலம் மாவட்டம், எடப்பாடியை பூர்வீகமாக கொண்டவர், மருத்துவர் அசோகன்.
எடப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த அவர் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார்.
அதன்பின்னர் 1990ஆம் ஆண்டு சின்னசேலம் பகுதியில் கால்நடை மருத்துவராகப் பணியைத் தொடங்கிய அவர் 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை மருத்துவராகப் பணியாற்றினார்.
அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட 5 யானைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
ரேடியோ டிரான்ஸ்மீட்டர் அறுவை சிகிச்சை
மூர்த்தி என்ற மக்னா யானையின் உடலில் இருந்து ஏராளமான துப்பாக்கி குண்டுகளை வெளியே எடுத்து அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். அவர் யானைகள் மட்டுமின்றி பல்வேறு வன உயிரினங்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.
தற்போது கோவையில் குடும்பத்துடன் வசிக்கும் அவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை மருத்துவராக உள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக 14 மலைப் பாம்புகளுக்கு ரேடியோ டிரான்ஸ்மீட்டர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். முதல் முறையாக வனப்பகுதியில் நோய் வாய்ப்பட்ட கழுதைப் புலிக்கு ஆறு மாதம் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெருமைக்குரிய மருத்துவர் அசோகன்.
இவருக்கு குடியரசு தின விழாவில் உயரிய விருதான அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது.
உயரிய சிகிச்சை
இதுகுறித்து அவர் கூறுகையில், "30 ஆண்டுகள் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அனுபவம் பெற்றிருந்தாலும் வனத்துறையில் பணியாற்றும் காலம் மறக்க முடியாது.
யானைகள் முதல் பாம்புகள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தன்னால் முடிந்த உயரிய சிகிச்சையை அளித்து காப்பாற்றியது மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் தனது உயரிய விருதான அண்ணா விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் விருதை நேரில் வாங்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.
வன உயிரினங்கள் குறித்து வகுப்பு
கால்நடைப் பராமரிப்புத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவத்தில் 13 முறை பணி மாறுதல் கிடைத்துள்ளது.
தன்னுடைய பணியில் குறிப்பிடும்படி முதுமலையில் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து மக்னா யானைக்கு சிகிச்சை அளித்தது நல்ல ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. தன்னுடைய குருவே மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி தான்.
அந்த வகையில், தற்போது வரை யானைகளுக்கு உயரிய சிகிச்சை அளித்து 30-க்கும் மேற்பட்ட யானைகளைக் காப்பாற்றி உள்ளேன். அது தவிர முதலைகள், குரங்கு, ஆடு, மாடுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளேன். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாம்புகள் குறித்தும் வன உயிரினங்கள் குறித்தும் வகுப்புகள் எடுத்து உள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: தீனதயாள் உபாத்தியாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி இருக்கை