கோவை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல்காரர்களை கண்காணிக்க காவல் துறையினர் ரோந்துப் பணிகள் மேற்கொண்டும் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
மேலும் காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோயில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்.எஸ். புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள் சிங்காநல்லூர் காவல் எல்லையில் ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்தி, அந்தப் பகுதிகளில் உலாவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதைத்தொடர்ந்து கோவை புதூர், மருதமலை உள்ளிட்டப் பகுதிகளில் சந்தன மரக் கடத்தல் கும்பல்கள் துணிகரமாகக் கடத்தலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு முதல் சாய்பாபா காலனி காவல் எல்லையில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்தும் கும்பல் உலாவி வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதைத்தொடர்ந்து சாய்பாபா காலனி பகுதியில் கடத்தல் கும்பலை நோட்டமிட்ட காவல் துறையினர், இன்று அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணி வரை அவர்களைப் பிடிக்க தீவிரம் காட்டினர்.
இதையடுத்து காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் ஓடிய திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், விஷ்ணு, அன்பு ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மரம் அறுக்கும் ஆயுதங்களான கோடாரி, ரம்பம் போன்ற பொருள்களை பறிமுதல் செய்தனர். அதேபோல தப்பியோடிய நான்கு பேருக்கும் காவல் துறையினர் வலை வீசி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: விசாரிக்க உச்ச நீதிமன்ற மறுப்பு