கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் எக்ஸ் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் சென்னையில் வசித்து வருகிறார். வைத்தியநாதனின் வீட்டில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் காந்தி கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அந்த வீட்டின் முன்புறம் சந்தன மரம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் மரத்தை வெட்டி காரில் ஏற்றுவது தெரியவந்தது .
இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கடத்தல்காரர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ள நிலையால் போலீசார் ரோந்து பணியை அதிகரித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.