கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற மினி வேனை சோதனை செய்யும் போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வாகனத்தில் வந்த ஷேஸ்தாராம்(50), மோதிலால்(38) ஆகியோரைப் பிடித்துக் காவல் துறையினர் விசாரித்தனர். அவர்கள் கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனிலிருந்து குட்காப் பொருட்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சரவணம்பட்டி காவல் துறையினர், மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் தீவிர சோதனை நடத்தினர். அங்கு சுமார் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள புகையில் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜனின் வீடு அருகில் வாடகைக்கு குடோன் எடுத்து, கடந்த 5 மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் எனக்கூறி, குட்கா பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. தற்போது, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரில் 30 ஆண்டு பழமையான சிலை திருட்டு- போலீசார் விசாரணை