கரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு-கேரள எல்லையான கோயம்புத்தூர் வாளையார் சோதனைச்சாவடியில் காய்கறி, பால், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையும் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் ஜூலை 8ஆம் தேதி அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனால் கேரள காவல்துரையினர் தமிழ்நாடு-கேரள எல்லையில் சோதனை நடத்தினர். அதில் காய்கறி லாரியில் மறைத்து வைத்திருந்த ரூ.1.75 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அதுதொடர்பாக ஆலப்புழாவை சேர்ந்த நிதின்குட்டி, சலாம் எனும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று வாளையார் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் சரக்கு ஆட்டோவை சோதனையிட்ட போது அதில் 62 (500 ரூபாய் நோட்டு கட்டுகள்) 7 (2000 ரூபாய் நோட்டு கட்டுகள்) என 45 லட்சம் ரூபாய் சிக்கியது.
அதுதொடர்பாக கோயம்புத்தூர் ஈச்சனாரி மசக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சம்பத்குமார், கெம்பட்டிகாலனியைச் சேர்ந்த பாலமுருக குருசாமி இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: 18 லட்சம் ஹவாலா பணம் வழிப்பறி: போலீசிடம் வசமாகச் சிக்கிக்கொண்ட புகாரளித்தவர்!