பொள்ளாச்சி - கிணத்துக்கடவு அருகே உள்ள ஆதியூர் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த கனகராஜ் (42), தனது குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் செல்ல முடிவு செய்தார். இதையடுத்து, தனது மனைவி செல்வி (30), மகன்கள் தர்ஷன் (8) தயாபரன் (5) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் 15 பேருடன் தனக்குச் சொந்தமான சரக்கு வேனில் காங்கேயத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றார்.
அங்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு புறப்பட்டு வரும் வழியில் அரிசி மூட்டைகளை வாங்கியிருக்கிறார். கிணத்துக்கடவை நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தபோது, கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சரக்கு வேன் நிலைதடுமாறி சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பியைத் தாண்டி, தலைகுப்புற கவிழ்ந்தது.
வேனில் இருந்த அரிசிமூட்டைகள் சிதறின. அந்த வாகனத்தில் பயணித்த 15 பேருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் துறையினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கனகராஜ் லேசான காயத்துடன் தப்பினார்; மற்ற 14 பேரும் கோவை பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் ஒரு சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தட்டுத்தடுமாறி ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்; பாழான நெல் மூட்டைகள்