டெல்லியில் வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி நாளை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”டெல்லியிலுலள்ள திஸ் ஹாசாரி நீதிமன்ற வளாகத்தில் கடந்த இரண்டாம் தேதி வழக்கறிஞர்களை காவல் துறையினர் தாக்கியதோடு மட்டுமில்லாமல் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர்களை தாக்கியுள்ள சம்பவத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் வழக்கறிஞரை தாக்கிய காவல் துறையினரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, சட்ட ரிதீயான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். காவல் துறையின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து நாளை ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க:நாட்டின் நலனுக்கு விரோதமாக வழக்கறிஞர்கள் செயல்படக் கூடாது - தலைமை நீதிபதி