வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் இன்றுடன் 28ஆவது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முற்றுகை போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் கண்டன முழக்கங்களை எழுப்பியபடி வந்தவர்கள், அவிநாசி சாலை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் பிரஸ் பல்பொருள் அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் கைது
இந்த போராட்டத்திற்குத் உறுதுணையாக இருந்த நிர்வாகிகளை முன்னெச்சரிக்கையாக அவர்களின் வீடுகளில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:’நானும் விவசாயி தாங்க’: முதலமைச்சரை கலாய்த்த ஸ்டாலின்