கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் 11 பேர் கரோனா தொற்று காரணமாக, கோவையில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 5 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில் அன்னூர் பகுதி ரெட் அலார்ட்டாக அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில வீதிகள், முற்றிலும் சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் 53 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அன்னூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் காவலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் நேற்று இரவு 108 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இவர் அன்னூர் பகுதியில் அமைந்துள்ள கோவை - ஈரோடு மாவட்ட எல்லையான, செல்லப்பம்பாளையம், சோதனைச் சாவடி மற்றும் திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையான, கஞ்சப்பள்ளி சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பணியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உடன் பணிபுரிந்த சுகாதாரத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், காவலர்களின் குடும்பத்தினர், பெண் காவலரின் குடும்பத்தினர், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு இன்று அன்னூர் காவல் நிலையத்தில் ரேபிட் பரிசோதனை நடைபெற்றது.
இதுவரை 120க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்ததில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மேலும், கரோனா தொற்று ஏற்பட்ட பெண் தலைமைக் காவலரின், குடும்பத்தை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை