கோயம்புத்தூர்: கோவை சூலூரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் கோவை சூலூரைச் சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகனை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டினர்.
இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் குலதெய்வ கோயிலான, சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் இன்று (செப்.17) குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தமிழர் பெருமை பறைசாற்றும் காளையர்கோவில்!
அதனைத்தொடர்ந்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மருமகன் விசாகனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மேலும், கோவை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில், முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காக விசாகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் கடந்த இரண்டு நாள்களாக கோவையில் விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா ஆகியோர் கோவை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக கூறினார். கூட்ட நெரிசலால் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் ரசிகர்களைப் பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இதையும் படிங்க: நிபா வைரஸ் பரவல்..! தேனி, போடி மெட்டு பகுதியில் சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனை!