கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் பகுதியிலுள்ள எருமைப்பாறை, கோழிகமுத்தி, வரகளியார், கூமாட்டி கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9 மாதங்களாக அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்து போக்குவரத்து வசதியும், வேலை வாய்ப்புகளும் இல்லாமலும் மிகுந்து சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ரேஷன் பொருள்களை மட்டுமே நம்பி வாழ்கின்ற இப்பகுதி மக்கள், காய்கறி, மளிகைப் பொருள்கள், முதியோர் உதவித்தொகை, மருந்துப் பொருள்கள் போன்றவற்றை பெற வனவிலங்குகள் அதிகம் உள்ள அடர் வனப்பகுதி வழியாக வந்து வேட்டை காரன்புதூர், ஆனைமலையில் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும், இவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஆனைமலை பொள்ளாச்சிக்கு செல்ல வாடகை காருக்கு 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை ஆகிறது. தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் பயன்படுத்த பேருந்து வசதியை செய்து தர மாவட்ட நிர்வாகமும், வனத்துறை உயர் அலுவலர்களும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்: ஆழியார் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!