கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தணிக்கை பத்திகள் மீதான துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில் தணிக்கை பத்திகள் மீதான துறை சார்ந்த ஆய்வு கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை இணை செயலாளர் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது குழு நிறுவனங்களின் குழு உறுப்பினர்களான அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஆறு பயனாளிகளுக்கு ஆதி திராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைப்புக்கான இணைய வழி பட்டாக்களையும், சாலை விபத்தில் மரணம் அடைந்த பத்து நபர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தர பாண்டியன் வழங்கினார்.
இதையும் படிங்க: "உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு திமுக அழிய போகிறது என்பதை காட்டுகிறது" -ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்!
மேலும் ஐந்து பயனாளிகளுக்கு தாட்கோ சார்பில், 19 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியத்தில், லோடு ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கடன் உதவிகளையும், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்களில் 7 தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளையும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தர பாண்டியன் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக டைடல் பார்க், சுங்கம் போக்குவரத்து கிளை, சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் குறித்து பொது நிறுவனங்கள் குழு தரப்பில் ஆய்வுப் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: "மோடி ராமநாதபுரத்தில் நின்றால் அவருக்கு எதிராக நானே நிற்பேன்" - சீமான் பரபரப்பு பேட்டி!