கோவை சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சியில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. தற்போது திடக்கழிவு மேலாண்மை சரிவர செயல்படாமல் குப்பைகளை, மக்கள் பயன்படுத்தும் சாலை அருகிலேயே போடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சிறப்பாக செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை என்று தமிழ்நாடு அரசால் பாராட்டு பெற்ற பேரூராட்சியில் தற்போது குப்பைகள் மழை போல் குவிந்து மின் கம்பிகள் செல்லும் அளவிற்கு குப்பைகள் தேங்கியுள்ளது.
திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதிக சேதம் உண்டாகும் என அச்சம் தெரிவிக்கும் பொதுமக்கள், குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் பஞ்சு ஏற்றுமதி செய்யும் மில் மற்றும் இரும்பு உருக்கு வேலை செய்யும் தொழிற்சாலை, லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் ஆகியவை செயல்பட்டு வருவதால் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் எனவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குப்பைக்கொட்டப்பட்டுள்ள இடத்தில் பறக்கும் குப்பைகள் வாகனத்தில் சொல்வோர் முகத்தில் படுவதால் நிலை தடுமாறி திடீர் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து பேரூராட்சியிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்; உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு