கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோபிளஸ் 2019 என்னும் பெயரில் விமானவியல் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை கோவை ரேப்பிட் ஆக்சன் போர்ஸ் கமாண்டண்ட் ஜெயகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில் கவ்கெர் ஹெச்.எஸ் 125 ஏர்கிராப்ட், கிங் ஏர் சி 90 ஏர்கிராப்ட், செஸ்னா 150 ஏர்கிராப்ட், என்ஸ்ட்ரோம் எப் 28 ஹெலிகாப்டர், க்ரும்மன் அமெரிக்கன் எஎ 1 ஏர்கிராப்ட், பெல் ஜி 47 ஹெலிகாப்டர், ஹெச்டி 2 ஏர் கிராப்ட் ஆகிய பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக அணிவகுத்து நிறுத்தப்பட்டது.
இதில், விமானங்களின் அரிய வகை புகைப்படங்கள், விமானங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டதோடு, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இயங்கும் விதங்களையும் கேட்டறிந்தனர்.
இங்கு வந்த மாணவர்கள் கூறுகையில், "இந்த கண்காட்சி எங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தது. இதில் பலரக விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருந்தது" என்றும் தெரிவித்தனர்.
இந்தக் கண்காட்சியை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த விமானவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.