இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மோகனா. இவர்களுக்குத் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளனர்.
மேற்சிகிச்சைக்காக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்கர், தனது மனைவி மோகனா மற்றும் அவரது தாயாருடன் கோயம்புத்தூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து, தங்கி சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
பாஸ்கரன் மார்ச் மாதம் இலங்கை திரும்பி உள்ளார். சிகிச்சை முடியாததால் மோகனாவும் அவரது தாயாரும் கோவையிலேயே தங்கி உள்ளனர். இதற்கிடையில் கரோனா ஊரடங்கு போடப்பட்டது.
சிகிச்சை ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில், ஊரடங்கு காரணமாக அவர்கள் இலங்கைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின் இருக்கும் பணத்தைக் கொண்டு மோகனாவும், அவரது தாயாரும் இத்தனை நாட்கள் கடந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவர்களது விசா முடியப்போவதாக பாஸ்கரன் கூறியுள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாகயிருக்கும் மோகனா செய்வதறியாது குழம்பிப்போயுள்ளார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்கள் வெளி நாட்டிற்குச் செல்ல முடியாத நிலை இருப்பதாலும்; அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதாலும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மோகனா மனு அளித்துள்ளார்.