கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முதலில் மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசின் அங்கீகாரத்துடன் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 482 மக்கள் மருந்தகம் உள்ளன. இங்கு மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கின்றன. இந்திய மக்கள் மருந்து திட்டத்தின் கீழ் இந்த மருந்தகங்கள் செயல்படுகின்றன.
மருந்துகள் குறைவான விலையில் கிடைப்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சராசரி சந்தை விலையில் இருந்து 50 சதவீதம் முதல் 90 சதவீதம்வரை மலிவாக மக்கள் மருந்தகத்தில் கிடைக்கிறது.
மேலும் உயிர் காக்கும் அனைத்து விதமான மருந்துகளும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் நன்மைகள் குறித்து மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர் சங்கீதா பேசுகையில், "கோயம்புத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மக்கள் மருந்தகத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய மருந்துகள் இங்கு குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகளவில் பயன்பெறுகின்றனர். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களும் அதிகரிக்கின்றனர்" என்றார்.
மக்கள் மருந்தகத்தின் வாடிக்கையாளர் கார்த்திக் கூறுகையில், "என்னுடைய தந்தைக்கு மாதத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கு மருந்துகள் வாங்கினோம். இதே மருந்து மக்கள் மருந்தகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் மூலம் சராசரியாக மாதம் நான்காயிரம் ரூபாய் சேமிப்பாகிறது. மருந்துகள் தரம் நன்றாக உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: தள்ளுபடி விலையில் அம்மா மருந்தகம் திறப்பு!