தைப் பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
இந்த பரிசுத் தொகுப்பை இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை 4 நாட்கள் நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வரும் 13ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இதனால் இன்று காலை முதலே தமிழ்நாடு மக்கள் நியாயவிலைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம், சிங்காநல்லூர் பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று தரப்படும் என நியாயவிலைக் கடைகளில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அதனைப்பெற மக்கள் இன்று காலை முதல் நியாயவிலைக் கடையின் முன்பு காத்திருந்தனர்.
அவர்களுக்கு வேட்டி, சேலை மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இலவச பொருட்கள் வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் பேசி நாளை வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ' துரோகம் செய்ததால் கத்தியால் குத்தினேன் ' - கோவையை அதிரவைத்த நபர்