பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "அதிமுக கூட்டணிக்கு திமுக காங்கிரஸ்தான் எதிரி. 17 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த திமுக எதையும் செய்யவில்லை. இனிமேல் செய்யப் போவதாகக் கூறி, நடக்காத ஒரு தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டிருக்கிறது. எதிரி நாடுகள் நம் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் திருப்பி அடிக்க பாரத பிரதமர் மோடி வலிமையாக இருகிறார். காங்கிரஸ் திமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று மு.க.ஸ்டாலின் கூறமுடியுமா?. தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் வேட்பாளர் என்று கூறிய மு.க. ஸ்டாலின், மேற்கு வங்கம் சென்று மம்தா பானர்ஜி முன்பு பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று கூற தைரியம் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பினார்.