வால்பாறையில் வருவாய் துறையின் சார்பில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கும் நிவாரண தொகையும் வழங்கவுள்ளார்.
அரசு விழாவில் பங்கேற்க வரும் அமைச்சரை வரவேற்று பொள்ளாச்சி–வால்பாறை சாலையில், குரங்கு அருவி முதல் அட்டக்கட்டி வரை சாலையின் பக்கவாட்டு சுவர்களில் அதிமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் ஒட்டப்படும் சுவரொட்டிகளால் குரங்குகள், பசையுடன் சேர்ந்து சுவரொட்டிகளையும் உணவாக்குவதால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு, வனத்துறை அலுவலர்களின் உத்தரவின் பேரில் அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர்.
அரசு விழாவில் பங்கேற்க வரும் அமைச்சரை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வனத்துறையினர் அகற்றியது அதிமுகவினரிடையே முகச்சுழிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுவரொட்டியை அகற்ற அறிவுறுத்திய வனத்துறை அலுவலர் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "சுகாதார நிலையத்தை மாற்றாதீர்கள்" - இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மக்கள் முற்றுகை