பாலக்காட்டிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் புறப்பட்டு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து சென்றுகொண்டிருந்தபோது மாக்கினாம்பட்டி அருகே உள்ள மின் நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரயில் சக்கரத்தில் சத்தத்துடன் உராய்வு ஏற்பட்டுள்ளது.
அதை உணர்ந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார், இறங்கி வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் கல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
இது தொடர்பாக திண்டுக்கல் ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமையிலான ரயில்வே காவல் துறையினர் அப்பகுதியில் ரகசியமாக முகாமிட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் தண்டவாளத்தில் கல் வைத்த அடையாளம் தெரியாத நபர்களை தேடிவந்தனர்.
அப்போது தண்டவாளத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டாலால் ராம், லால்கிமாகி, நாகேந்திர மாஜி ஆகிய மூன்று பேரை கைது செய்து ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குடிபோதையில் இருப்புப் பாதையில் கல் வைத்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.