கோவை பொள்ளாச்சியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அதிமுக பொள்ளாச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பொள்ளாச்சி கால்பந்து சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றனர். நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சென்னை ஜே.பி.ஆர் கல்லூரி அணியும், பொள்ளாச்சி கால்பந்து கிளப் அணியும் தகுதி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இதையடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் பொள்ளாச்சி கால்பந்து கிளப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வெற்றி பெற்ற பொள்ளாச்சி அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம் இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.10ஆயிரம் பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையும், கோப்பைகளையும் வழங்கினார். இதில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், பெப்சி மகேஷ், ஜேம்ஸ் ராஜா,மின்னல் சீனி,விமல்குமார், அருளனந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா தொடர் ரத்து!